Thursday, 12 May 2016

மனித உரிமை மீறல்களுக்குத் துணைபோகிறது இலங்கையின் நீதித்துறை

துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகளை அனுமதிப்பதன் ஊடாக இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு மனித உரிமை மீறல்களுக்கு அனுமதியளிப்பதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை சென்று நிலமைகளை நேரில் ஆராய்ந்திருந்த சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா வின் சிறப்புப் பிரதிநிதி ஹுவான் ஈ மெண்டிஸ் மற்றும் சுயாதீன நீதிமன்ற கட்டமைப்பிற்கான ஐ.நா பிரதிநிதி மொனிக்கா பின்டோ ஆகியோர் தமது விஜயம் தொடர்பில் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.குற்றச்செயல்கள் தொடர்பில் சிறிலங்காவின் நீதிமன்ற கட்டமைப்பு செயற்பட்டுவரும் விதம் மறைமுகமாக சித்திரவதைகளை நீதிமன்றங்கள் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளன என்றும் ஐ.நா பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தண்டனை வழங்குவதற்கு ஒப்புதல் வாக்குமூலத்தை மாத்திரம் சாட்சியாக எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவிக்கும் ஐ.நா அதிகாரிகள் சிறிலங்காவில் 90 வீதமான தண்டனை வழங்கும் வழக்குகள் ஒப்புதல் வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக பயங்கரவாத மற்றும் குற்றப்புலனாய்வு பொலிசார் மாத்திரமன்றி சாதாரண பொலிசாரும் சித்திரவதைகளையும் துன்புறுத்தல்களையும் ஆயுதமாக பயன்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். அது மாத்திரமன்றி சிறிலங்காவின் நீதிமன்றக் கட்டமைப்பில் தமிழ் மொழி அறிந்த மற்றும் சிறுபான்மையின நீதிபதிகளின் பற்றாக்குறையும் நீதி நிலைநாட்டப்படாமைக்கு பிரதாக காரணமாக அமைந்துள்ளது என்றும் ஐ.நா அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive